Feeds:
Posts
Comments

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி…

பால்ய பருவத்தின் பசுமை நினைவுகள் எண்ண  ஓட்டங்களில்  மின்னலடித்துச் செல்லும் வேளையில், இதுவரை  உள்ளக்கிடங்கில் மரித்துக் கிடந்த உணர்வுகளும் உயிர்த்தெழுகின்றன. இளமையில் உறவுகள், உணர்வுகள், சுயமரியாதை, கனவுகள், எதிர்ப்பார்ப்புகள், தனிமனித சுதந்திர கண்ணாடிகளை நொறுக்கிவிட்டு அந்திமக் காலத்தில் ஒட்ட வைப்பது அநியாயமாய் தோன்றுகிறது.

டெரா கோட்டா கூரையின் கீழ் நூற்றாண்டுகளை கடந்த நகரம்…. நவீனமும் பின்நவீனமும் இரண்டரக் கலந்த கட்டடக்கலை… உலகமே வியந்து நோக்கும் முதல் இரட்டைக் கோபுரம்…  சிநேகமான(??!!) மனிதர்கள் நிரம்பி வழியும் பெட்டாலிங் ஐந்தடிகள்…. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  கலாச்சாரங்கள்… வருடம் முழுதும் பண்டிகைகள்…. தங்க முக்கோணங்களை இணைக்கும் ஒருதொடருந்துகள்(Monorail), ஒவ்வொரு 10-15 நிமிடங்களுக்கும் விரைவு இரயில்கள்(LRT & Commuter),  100இல் 60 விழுக்காடு அந்நிய தொழிலாளிகளால் நிரம்பி வழியும் பேருந்துகளும் அதன் நிலையங்களும்…  7 மில்லியனை நெருங்கி விட்ட மக்கட்தொகை, சாலையெங்கும் வாகன நெரிசல்…

இவை அனைத்தையும் தாண்டி தலைநகர் கோலாலம்பூர்  என் நினைவில்…  பால்ய பருவ வருகையை தவிர்த்து தன்னந்தனியாய் முதல் பட்டிண பிரவேசம். புடுராயா  பேருந்து நிலையத்தை விட்டிறங்கி கோத்தாராயா பேருந்து நிறுத்தகத்தை எப்படியோ கண்டுப் பிடித்து பதினேழாம் எண் கொண்ட பேருந்திலும் ஏறியாகிவிட்டது… நிச்சயமாய் எங்கே இறங்க வேண்டும் என்பது சரியாகத் தெரியாது என்ற நிலையிலும் எங்கள் புலத்திலேயே பேருந்து நிற்கும் என்ற தோழியின் உபத்தகவல் அப்போதைய சூழ்நிலைக்கு ஆறுதலாய்.. . பரிச்சயமற்ற  போக்குவரத்துத்  தடம்… சினேகமற்ற சக பயணியின் (பெரும்பாலும் அன்னிய தொழிலாளிகள்) பார்வைகள்… முடிவே இல்லாத பயணமாய் மிரட்ட ஒவ்வொரு நிறுத்தகமும் எரிச்சலூட்ட ஆரம்பித்துவிட்டது.  பச்சை நிற மசூதி வந்ததுமே பேருந்து மணியை அழுத்திவிடச் சொன்ன தோழியின் நினைவு வர பேருந்து மணியைத் அழுத்த பேருந்து நடுத்துனர் இன்னும் யூனிவர்சிட்டி வரல என்றது அன்றையச் சூழ்நிலையில் பதற வைக்கவே செய்தது… பின்னாளில் அவர்களை கண்டுக் கொள்ளாத அளவிற்கு தேறியிருந்தோம்.

என்னுடன் சேர்ந்து மேலும் இரு தோழிகள் பிறகு இணைந்துக் கொண்டார்கள்..அவர்கள் இருவரில் ஒருவர் இல்லாமல் தனியாய் பயணிப்பதில்லை என்று அப்போதே முடிவெடுத்திருந்தோம். ஆனால் தற்போது அந்த பேருந்துகளை பார்க்க நேரிடும் போது பல்கலைக்கழக நினைவுகளும் நண்பர்களோடு சேர்ந்து அரட்டையடித்த தருணங்கள் நெஞ்சை அழுத்துவதுண்டு.!!!

மூன்று வருட பட்டப்படிப்பைத் தொடர்ந்து வேலை என்று தலைநகரிலேயே புலம்பெயர்ந்து விட்டாலும் தலைநகர் வெறும் பொருளியல் களமாகவே எனக்குத் தோன்றுகிறது.. விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும்…அதிநவீன பேரங்காடிகளாகட்டும்…இல்லை  திரையரங்காகட்டும்… அந்த நிமிட மகிழ்ச்சிக்காக மட்டுமே!!!

வெவ்வேறு கலாச்சாரங்கள்…மத நம்பிக்கைகள்…வேறுபாடுகள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டுகளைப் போல்… ஒருமைப்பாடு… நல்லிணக்கம் என்பதெல்லாம் இவர்களின் முகமூடியாய்…அசாதரணமாய் அங்குமிங்கும் முற்போக்குவாதிகள்… இதையெல்லாம் தாண்டி நாகரிக கோமாளிகளின் வசிப்பிடமாய் தலைநகர்..!!!

மலேசிய மலாய் இலக்கிய உலகில் முக்கியமானவராக கருத்தப்படும் அ. சமாட் சய்யிது (A. Samad Said) அவர்கள் 9 ஏப்ரல் 1935-இல் மலாக்கா டுரியான் துங்காலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் (டத்தோ) அப்துல் சமாட் முகமது சய்யிது ஆகும். மலேசிய மலாய் இலக்கிய வரலாற்றின் மைல்கல்லாக விளங்கி வரும் அ. சமாட் சய்யிது கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதை, நாடகம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. இவரின் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை சலின்னா(Salina), ஃபத்தேப்பூர் சிக்ரியில் தேனில்லா நிலவு(Bulan tak bermadu di Fatehpur Skri), அந்திவானம்(Langit Petang), காலைமழை(Hujan Pagi), ஏரியோரத்தில் மன உதிப்பு(Ilham di tepi tasik) மற்றும் அல்-அமீன் (நபிகள் நாயகத்தின் வரலாறு-கவிதையாக).

இவருடைய பெரும்பாலான கவிதைகள் இறைச் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் இக்காலத்துக்கும் ஒட்டியே கிளைப்பரப்புகிறது. இறையைப் பற்றி பேசும் இவரின் பெரும்பாலான கவிதைகளில் தத்துவமும் விரவிக் கிடக்கிறது. எனினும் மதம் சாராது வழியிலே இவருடைய கவிதைகளை வாசிக்க நிச்சயமாய் பொறுமையும் வேண்டும்.

இவருடைய படைப்புகளில் நான் மிக முக்கியமானதாய் கருதும் ஒரு சில கவிதைகளை மட்டும் இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இக்கவிதைகளின் மூலம் சிதைந்து விடாமல் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினம் என்பது இதை மொழியாக்கம் செய்யும்போது நன்றாகவே உணர முடிந்தது. இருந்தும் மலாய் நவீன கவிதையை தமிழ்கூறு நல்லுலகுக்கு  தரும் ஆர்வத்தில்…

ஒரேயொருமுறை
என் கால் நனைத்த
அந்த அலையை
இனி நான் கண்டுக்
கொள்ளயேதுவாய் இல்லை!!!

எளிமையான சொல்லாடல் என்றாலும் அதன் தத்துவார்த்தத்தை உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் திணறுவது இக்கவிதையின் பலம் எனலாம். இந்தக் கவிதையை பல்வேறு கோணத்தில் அலசலாம். ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் அதன் அலைக்குமுள்ள சிநேகம் கரையைத் தொடும் வரையில் என்றாலும்.. அது விட்டுச் செல்லும் அடையாளங்கள் அடுத்த அலை கரையை மீறும் வரையில்தான். அதுப்போல் அமைதியான வாழ்வுதனை தோல்விகளும் சோதனைகளும் புரட்டிப் போட்டு வேரறுத்தாலும் அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் அது நினைவில் நிற்பதில்லை என்ற வாழ்வின் அடிப்படை நிதர்சனத்தை மிக எளிய வரிகளில் எடுத்துரைத்திருக்கிறார் அ.சமாட் சய்யிது.

 

நண்பன்
அடிக்கடி கைக்குலுக்கிக்

கொண்டாலும் நாம்

 ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை?

 
ஹைக்கூ வகையிலான அரசியல் நையாண்டி வகை கவிதையிது:

இடம்
யார் தொடங்கினாலும்
வலமே முடிவுற வேண்டும்!!

 

நூலகத்தினுள்ளே..

நூலகத்தினுள்ளே
என் கண்கள்
சொறுகி மூடியிருக்க
கண்கள் மூடி வாசிப்பதைவிட
புத்தகம் மூடி கண்கள் திறப்பது
நல்லதில்லையா?
வயோதிகரின்
குரல் சுண்டியிழுக்கிறது…

மறுநாளிலிருந்து
நான் கண்ணயர்வதேயில்லை
அந்த வயோதிகரை
பார்த்து நாளாயினும்

நூலகத்த்தினுள்ளே
இப்பொழுதெல்லாம்
நான் வாசிக்கிறேன்
கண்களோ அடிக்கடி
அந்த வயோதிகர்
தங்கிச் சென்ற இருக்கையை
நோக்கி!!!                                                             

Older Posts »

Follow

Get every new post delivered to your Inbox.